Tuesday, October 1, 2013

கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி துமளி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை நடவடிக்கையும் ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு அதன் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று (01) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
 

இதன்போது கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை முறியடிக்க வேண்டும் என்று இதன்போது அவர் வலியுறுத்தினார்.

சிறுபான்மையினரின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை ஒழிப்பதற்கோ அல்லது 13 ஆவது திருத்த சட்டத்தில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை குறைப்பதற்கோ கிழக்கு மாகாண சபை ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜெமீல் கேட்டுக் கொண்டார்.

இவரது இந்த உரையைத் தொடர்ந்து பேசுவதற்கு எழுந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்; குறித்த பிரேரணைக்கு தனது பலமான எதிர்ப்பை வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதால் அது குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்லாமல் 13 ஆவது திருத்த சட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த சபையில் அது பற்றி விவாதிக்க முடியாது என்று தெரிவித்த முதலமைச்சர்; இந்த விவாதத்தை நடத்துவதற்கு தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எனினும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அதற்கு இணங்கவில்லை. முதலமைச்சர் சொல்லுகின்ற காரணங்களின் நிமித்தம் இப்பிரேரனையைக் கைவிட முடியாது என்றும் சிறுபான்மைச் சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட இந்த சபையில் இது குறித்து பேச முடியாது என்றால் வேறு எங்கு போய் இதனைப் பேசுவது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.


இதன்போது ஜெமீலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். அதேவேளை முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் தரப்பு சிங்கள உறுப்பினர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.

கிழக்கின் ஆட்சியை இன்றே மாற்றியமைப்போம் - பொம்மை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் - போன்ற கோஷங்களும் வானைப் பிளந்தன.

இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த வேளையில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை ஒத்திவைத்தார்.


இதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரேரணையை கைவிடுவோம் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் வற்புறுத்தியுள்ளார்.


அதனை தவிசாளர் ஆரியவதி கலப்பதியும் ஏற்றுக் கொண்டு முடிவை அறிவிக்க முற்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஜெமீல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி ஆகியோர் அதற்கு இணங்காமல் அப்பிரேரணையை விவாதத்திற்கு எடுத்தாக வேண்டும் என விடாப்பிடியாக நின்றனர்.

இது விடயத்தில் எமக்கு அநீதியிழைக்கப்படுமானால். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து புதிய தவிசாளரைத் தெரிவு செய்வோம் என்றும் ஆட்சியை மாற்றியமைப்போம் என்றும் அவர்கள் இருவரும் கடும் தொனியில் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து முதலைமைச்சரும் தவிசாளரும் குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கு இணங்கி வந்தனர். அதன் பின்னர் ஒத்திவைப்புக்கப்பட்ட சபை தவிசாளரினால் மீண்டும் கூட்டப்பட்டு விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இன்றைய அமர்வில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி kalam1st

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo